குளிர் காலத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒரு அழகிய கலைப் பொழுது. குளிரிலிருந்து தப்புவதற்கு மேலங்கி தேவைப்படவில்லை. மூடுபனி கவிந்திருக்கும் காலைப் போதுகளில் முகில்களூடு பயணிப்பது போல் உணர்வதுண்டு. எல்லாம் ஏதோவொரு அமானுஸ்யத் தன்மைக்குள் புதைந்திருப்பது போலிருக்கும்.
காலை நேரமென்பதால் பூங்காவில் அதிகக் கூட்டமில்லை. அந்தப் பூங்காவிற்குப் போகுப் போதெல்லாம் அங்கேயே இருக்க முடிந்து விட்டால் எவ்வளவு நன்றாயிருக்குமென எண்ணிக் கொள்வேன்.
அது ஒரு ஓக் மரத் தோப்பு. பறவைகள் மற்றும் அணில்களுக்கும் கூடப் பஞ்சமில்லை. அங்கே 125 வயதான ஒரு ஓக் மரமுள்ளது. அந்த மரம் இறந்து கொண்டிருப்பதாயும் அதன் மீது ஏறவோ ஏதும் செதுக்கவோ வேண்டாமென எழுதி வைத்திருக்கிறார்கள். அங்கு போகும் போதெல்லாம் அந்த மரத்தோடு பேசி நலம் விசாரிக்காது வருவதில்லை. நேற்று அங்கு போகும் போது மரங்கள் நடுவே நெளியும் பாதை சூரிய ஒளியிற் குளித்துக் கொண்டிருந்தது. வழமையாகக் காணும் பருந்து அங்கொரு மரத்தில் ஒளிந்து கொண்டிருக்கிறது என உள்மனம் சொல்லியது. பாசி முளைத்த மரக் கிளைகள் கவிந்த வனம். வலது பக்க மரமொன்றில் அந்தப் பருந்து. ஏதோ உந்துதலில் இடது புறம் திரும்பிய போது கண்ணிற்பட்டது மற்றொரு பருந்து. தலையத் திருப்பிப் பார்த்து விட்டுத் நான் நின்ற பக்கமாகத் திரும்பி உட்கார்ந்து கொண்டது. இரண்டு பருந்துகள் எனக்குப் பிடித்த இடத்தில் - அகம் மிக மகிழ்வுற்றுக் குதித்தாடியது. பத்து நிமிடங்களுக்கும் குறைவாக நீடித்த அற்புதம், ஒரு மெய்க்கனவு.
இயற்கை தன் அரும் பெரும் இரகசியங்களை எப்போதும் ஒளித்து வைத்துக் கொள்வதில்லை. அந்த இரகசியங்கள் வெளிப்படத் தொடங்கும் போது அவை ஒன்றின் பின் ஒன்றாக அணி வகுத்து வந்து நம்மைத் திக்குமுக்காடச் செய்யும். இப்படியான தருணங்களால் நிறைந்த வாழ்வை விட வேறென்ன வேண்டும்?