Wednesday, April 27, 2011

லொட்டின் மனைவி
-------------------
கோடைமழையில்
நெகிழ்ந்து பூக்கத் தொடங்கியிருந்த
முற்றத்து வேம்பு தெரிகிறதாவெனப்
பார்க்கவே திரும்பினேன்
கடைந்த தயிரை மறந்து விட்டேன்
காய்ப் போட்ட நெல்லு மணிகளைப்
புலுனிகள் தின்னத் தொடங்கியிருக்கும்
கிணற்றடியில் காய்கிற துணிகளை
யார் மடிப்பார்கள்?

கோடை நிலம் சுடுவது பற்றி லொட்டுக்கு
ஒரு கவலையுமில்லை
வீண் தாமதமென்று
செருப்புகளைத் தேட விடவில்லை

சுருண்டெழும் புகையினூடு
வெளிச்ச வீடு தெரிகிறது
கடலும் அதன் நீலமும்
உப்பின் சுவையூறிய கிளிஞ்சல்களும்
பரந்த மணல் வெளியும்.....

செத்த மீன்கள் கரையொதுங்குவது நிற்கவில்லை
உருக்குலைந்த உடல்களும் 
ஏதோ ஒரு நம்பிக்கையில் அடையளங் காண்கின்றனர்

கோயில் குளம் மட்டும் எப்போதும் தாமரைகளாகப் பூத்தபடி

கந்தகப் புகைக்கும் மனித ஓலங்களுக்கும் நடுவே
யாராவது 'போகாதே' என்று கூப்பிட மாட்டார்களாவென 
எண்ணியே திரும்பினேன்

திருப்பிய கழுத்தை
மீண்டும் அசைக்க முடியவில்லை
கால்கள் நகரவில்லை

பாற்கடலில் மேரு போல
மின்சாரம் பாய்ச்சியது போல
உயிர் சுழன்றது 

சிறு நீர்த்துளியெனக் கடைசியாகக் கண்ட காட்சியும்
உணர்ந்த உணர்வும் என்னுளுறைந்தன.