Saturday, May 28, 2011

கடல்

கூதல் காற்று வீசும் நாட்களில்
யாரும் கடலுக்குச் செல்வதில்லை

மனித ஓலங்களையொத்த
அலைகளின் சத்தம்
கடலுக்கப்பால்
என்னவுள்ளதென அறியத்தூண்டும்

கல்லும் மண்ணும் தோன்று முன் தோன்றிய
இனமுள்ள அழகிய தீவொன்றுளது
கடலுக்கப்பால்

கால்கள்
கைகள்
கண்கள் இழந்தோரும்
வன்முறைக்குப் பலியானோரும்.....

பெருந்தீயெரிந்து ஓய்ந்து
கனலுந் தணல்களுள்ள
என் நிலம் பசுமையோடிருந்தது முன்னோரு காலத்தில்.

Thursday, May 19, 2011

தலைப்பிடாதது

தொலைவிலிருந்து பாடல் கேட்கிற இரவொன்றில்
காதலில் சுடர்கின்றன உன் கண்கள்
கூரையிடுக்கினூடு கசியும் நிலவைக் காட்டி
இடது தோளில் ஏதோ வரைகிற விரல் நுனிகள்
பின் தயக்கத்தோடு
ஒரு குழந்தையின் கன்னங்களை வருடுவது போல
என் மார்பின் மென்மையை மெதுவாய் வருடுகின்றன

                                           இரவுக்கு இறக்கைகளில்லை
                                           நிலவும் நகர்வதாயில்லை

முத்தமிடுகையில் இடறும் மூக்குத்தி
சர்ப்பங்களிரண்டு சீறுவது போல மூச்சொலி
பற்கள் காயப்படுத்தி விடக்கூடாதென
மிகுந்த கவனத்தோடு
உனது முத்தம் மெதுவாக வேர் பிடிக்கிறது

                                         நிலவு மறைந்து போகிறது
                                         இரவு நீள்கிறது.